நீரிழப்பை உணர்த்தும் அறிகுறிகள்
கோடை காலத்தில் நீரிழப்பை ஈடுசெய்ய அடிக்கடி தண்ணீர் பருகியவர்கள் மழைக்காலம் தொடங்கியதும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள்.
பருவநிலை மாறினாலும் போதுமான அளவு தண்ணீர் பருகாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்த்தும் ஒருசில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தாகம்
இதுதான் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும். நீரிழப்புடன் இருக்கும்போது, தாகம் ஏற்படுவதை உணர்த்த உடல் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அடிக்கடி சிறிதளவாவது தண்ணீர் பருக வேண்டும்.
சிறுநீர் கழித்தல்
உடல் நீரிழப்புக்கு ஆளாகும்போது, திரவங்களை சேமிக்க முயற்சிக்கும். அதனால் சிறுநீர் வெளியேறுவது தாமதமாகும். அல்லது குறைவாகவே சிறுநீர் வெளியேறும். நீண்ட நேரமாக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் உடல் நீரிழப்புக்கு உள்ளாகி இருப்பதை உணர்த்தும்.
வாய் வறட்சி
நீரிழப்பு ஏற்பட்டிருந்தால் வாய் மற்றும் உதடுகள் வறண்டு போய்விடும். உதட்டில் ஆங்காங்கே சிறு சிறு வெடிப்புகளும் ஏற்படக்கூடும். வாய் துர்நாற்றமும் ஏற்படக்கூடும்.
சோர்வு – மயக்கம்
நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உண்டாகக்கூடும். சிலருக்கு மயக்கமும் ஏற்படும்.
தலைவலி
நீரிழப்பு அதிகரித்துவிட்டால் தலைவலி ஏற்படும். திரவங்களின் பற்றாக்குறை காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிப்படையும். அதன் வெளிப்பாடாக தலைவலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
உலர்ந்த சருமம்
நீரிழப்பு உதட்டை மட்டுமல்ல சருமத்தை வறண்டுபோக செய்துவிடும். சருமத்தின் மென்மைத்தன்மை மாறிவிடும். சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும்.
கண்கள்
நீரிழப்பு கண்களையும் பாதிப்படையச் செய்துவிடும். நீரிழப்பை ஈடு செய்ய கண்களைச் சுற்றியுள்ள எல்லா இடங்களில் இருந்தும் திரவங்களை இழுக்கும். அதனால் கண்களை சுற்றி வறண்டு, குழி விழுந்தது போல் காட்சி அளிக்கும்.
தசைப்பிடிப்பு
தசைப்பிடிப்பு உண்டாகும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தசைப்பிடிப்பால் அவதிப்பட வேண்டியிருக்கும். எனவே, போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும்.